Friday, August 13, 2010

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், இப்படிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு சிறிலங்க அரசிற்கு இந்தியா எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ள பதில், உண்மையை மறைப்பதாகவும், பிரச்சனையை திசை திருப்புவதாகவும் உள்ளது.

“இந்திய இலங்கை கடல் எல்லையை மதிக்க வேண்டும் என்றும், தங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எல்லையைக் கடந்த சென்று மீன் பிடிக்காதீர்கள் என்றும் நமது மீனவர்களுக்கு உணர்த்த வேண்டும். குறிப்பாக சிறிலங்க அரசு அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்று கருதும் கடல் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும” என்று அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவுரை கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சிறிலங்க அரசிற்கு கடிதங்களை எழுதியுள்ளதாகவும், ஆனால் இந்திய மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும், மீனவர்கள் சர்வதேச எல்லையை மீறி செல்லும்போதுதான் (சிறிலங்க கடற்படையினரால்) சுடப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்!

இந்திய இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையைக் கடந்து செல்லும் போது இந்திய மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கியால் சுடுவதை சிறிலங்க அரசு இந்திய அரசிடம் ஒப்புக்கொண்டுள்ளது கிருஷ்ணா கூறிய வார்த்தைகளில் இருந்தே புலனாகிறது. இந்த இடத்தில் இரண்டு கேள்விகள் எழுகிறது.

ஒன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைக் கடந்து சென்று மீன் பிடிக்கும் இந்திய (தமிழக) மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை துப்பாக்கியால் சுடுவது நியாயம்தானா?

இரண்டு, அவர்கள் எல்லை மீறி சிறிலங்க கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோதுதான் சுடப்பட்டார்கள் என்று சிறிலங்க அரசு கூறுவதைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு உறுதி செய்கிறதா?

சிறிலங்க மீனவர்களை நமது கடற்படை சுடாதது ஏன்?

இந்தியா, இலங்கை இடையே, மன்னார் வளைகுடா பகுதியிலும், வங்க விரிகுடா கடலிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட (1974ஆம் ஆண்டு கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தின்படி) கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடித்த இந்திய மீனவர்கள் மீது தான் துப்பாக்கியால் சுட்டோம் என்று சிறிலங்க அரசு கூறுவதை ‘நியாயமான நடவடிக்க’ என்று இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதென்றால், அதே எல்லையைக் கடந்து வந்து இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க வரும் சிங்கள மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் ஒருமுறை கூட சுடாதது ஏன்?

தமிழக (இந்திய) மீனவர்கள் எல்லையைக் கடந்து சென்று மீன் பிடிக்கும் போதுதான் சுடப்படுகிறார்கள் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா மட்டுமல்ல,. இதற்கு முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருமே எல்லைக் கடந்து சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களைத் தான் சிறிலங்க கடற்படை சுடுகிறது என்று கூறுவதோடு மட்டுமின்றி, எப்போதெல்லாம், அது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டாலும் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். “நமது மீனவர்களை எல்லைக் கோட்டை கடந்த சென்று மீன் பிடிக்காதீர்கள” என்றஅறிவுரை கூறுமாறு பிரணாப் முகர்ஜி கூறினார். இப்போது எஸ்.எம். கிருஷ்ணா கூறுகிறார். வித்தியாசம் அவ்வளவே.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக உறுப்பினர் கனிமொழி, எல்லைத் தாண்டி வந்து மீன பிடிக்கும் சிறிலங்க மீனவர்கள் நாம் சுடுவதில்லையே, கெளரவாக நடத்துகிறோமே. அதுபோல் நமது மீனவர்களை ஏன் சிறிலங்க கடறபடை துப்பாக்கியால் சுடாமல் கெளரவமாக நடத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நேரிடையாக பதில் சொல்லாத அமைச்சர் கிருஷ்ணா, விரைவில் இலங்கை செல்லப்போவதாகவும் அப்போது அதுபற்றிப் பேசுவதாகவும் கூறி மழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல, சிறிலங்க கடற்படையினரால் ஒவ்வொரு முறையும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள், கரை திரும்பி முறையிடும் போதெல்லாம், இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி வந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று சிறிலங்க கடற்படையினர் மீது புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுவதில்லை. இதுவரை நடக்கவில்லை.

இதுகுறித்து ஒரு பொது நல வழக்கை வழக்கறிஞர் பா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்து, அது விசாரணைக்கு (மார்ச் 10, 2010இல்) வந்தபோது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் நேர் நின்ற வழக்கறிஞ்சர் எம். இரவீந்திரன் என்ன கூறினார் தெரியுமா?



“சர்வதேசக் கடற்பரப்பில் சென்று மீன் பிடிக்கும் போது தாக்கப்பட்டால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக சிறிலங்கா மீது படையெடுக்கவா முடியும்?” என்று ஏளமான கேட்டார். இந்தச் செய்தி வழக்கு நடந்த அன்றே தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தி்ல் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் இவ்வாறு கூறியபோது தலையிட்ட, பா.புகழேந்தி சார்பில் நேர் நின்ற மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஏன் நீதிமன்ற விசாரணை நடத்தப்படவில்லை என்றுதான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இதுதான் இந்திய மீனவர்களைக் காப்பாற்றும் டெல்லி அரசின் யோக்கிதை!

ஐ.நா.வின் சர்வதேச கடல் சட்டம் கூறுவதென்ன?

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைத் தாண்டுபோதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது (He said firing was done only when they crossed the international maritime border of Sri Lanka) என்று அமைச்சர் கிருஷ்ணா கூறுகிறாரே, அப்படியானால் அது உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையா?

மீனவர்களின் தொழில் மற்றும் பாரம்பரிய மீ்ன் பிடி உரிமை, நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைக்கோடு, அது சார்ந்த வணிக நடைமுறைகள் ஆகியன குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கும் ஐ.நா.வின் கடல் சட்டம் (UN Law on Sea) என்ன கூறுகிறது?

கடல் எல்லையைத் தாண்டிச் செல்வது சமூக பொருளாதாரக் (civil economic offence) குற்றம்தான். ஆயினும் (அதன் பிரிவு 146இன் படி), இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் படைகள், மனித (மீனவர் என்று கொள்க) வாழ்வை பாதுகாக்கக் கூடிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு்ம் என்று கறுகிறது (Crossing the maritime boundary is a civilian economic offence. Article 146 of the U.N. Law of the Sea stipulates that ``measures will be taken to ensure effective protection of human life'').

எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிக்கும் அயல் நாட்டு மீனவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அதே சட்டத்தின் பிரிவு 73 இவ்வாறு கூறுகிறது: “எல்லைக் கடந்து வந்து மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளில் இறங்கலாம், சோதனையிடலாம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுகுக உட்படுத்தலாம் (Article 73 mentions that coastal states can take measures ``including boarding, inspection, arrest and judicial proceedings to ensure compliance with the laws and regulations'') என்று கூறுகிறது.

இதன்படியா சிறிலங்க கடற்படை நடந்துகொள்கிறது? “மீன் கிடைக்கும் இடத்திற்கு மீனவர் செல்வர்” (Fishermen go where the fish is) என்றஅந்த சர்வதேசச் சட்டம் சொல்கிறது. இதை (எம்.கே.நாராயணன் அவரைச் சந்தித்தபோது) ராஜபக்ச கூட குறிப்பிடுகிறார்! “நான் மீன் வளத் துறை அமைச்சராக இருந்துள்ளேன், எனக்கு மீனவர்களின் நிலை தெரியும” என்றும் கூறினார்.

இதனை என்றைக்காவது இந்தியா சிறிலங்க அரசிடம் கூறி, தமிழக மீனவர்களை ஏன் சுடுகிறாய் என்று கேட்டுள்ளதா? ஏன் கேட்கவில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது தமிழக அரசிற்கோ புத்தியில்லை என்பதாலா? அல்லது தமிழ் மீனவர்களுக்கு என்று டெல்லி தனி ‘நியாயம்’ வகுத்துள்ளதா?

ஐ.நா.வின் கடல் சட்டத்திற்கு இணங்கவே எல்லையைத் தாண்டி மீன் பிடித்து மாட்டிக் கொள்ளும் இந்திய மீனவர்களை துன்புறுத்தாமல் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தான் மீனவர்கள் எல்லைத் தாண்டி வரும் போது கைது செய்யும் இந்திய கடலோர காவற்படை அவர்களை கெளரவமாக நடத்துகிறது. அதே நேரத்தில் இந்திய கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் போது அவர்களை நமது கடலோர காவற்படை பாதுகாக்கவும் செய்கிறது. இதில் தமிழக மீனவருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? ஏன் தமிழக மீனவன் மட்டும் சுடப்பட்டால் மட்டும் சிறிலங்க குரலில் இந்தியாவின் அயலுறவு அமைச்சர்கள் பேசுகிறார்கள்?

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல் நழுவி விடலாம். ஆனால் தமிழக மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு டெல்லி பதில் கூறியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நெருப்பை நெஞ்சில் கட்டிக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவனுக்கு இந்த விவரங்கள் எல்லாம் இன்றைக்குத் தெரியாமல் இருக்கலாம். நாளை தெரியவரும்போது கொந்தளிப்பான். அப்போது, தமிழக மீனவனின் கடல் சார் உரிமைகளை ஒப்பந்தம் போட்டு அடகு வைத்த டெல்லியின் துரோகத்திற்கு ஒட்டுமொத்தமாக பதில் கிடைக்கும்




//////////////////////////////////////////


சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ,பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் சிறிலங்க கடற்படையினரின் நடவடிக்கைகை தடுத்து நிறுத்திட வேண்டும் , சிறிலங்க அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக நெடுமாறன் கூறியுள்ளார்.

“இலங்கை கடற் பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சிங்கள மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதேயில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறா
ர்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. இராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எஸ்.எம். கிருஷ்ணா இராசபக்சேயின் குரலில் பேசுகிறார்.சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்” என்று அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்

1 comment: